அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தினை இரண்டு மடங்காக உயர்த்தி அதற்கான அரசாணையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்.,16) வழக்கறிஞர்களிடம் வழங்கினார்.
சென்னை உயர் நீதிமன்றம் கீழ் குற்றவியல் நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம், முன்சீப் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.
இந்த நீதிமன்றங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்ளனர்.
இவர்கள் அரசு சார்பாக வழக்குகளில் ஆஜராகி வருகிறார்கள்.
இவர்களின் கட்டண விகிதமானது கடந்த 1995ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
அதன் பின்னர் 2006ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்.கருணாநிதி பதவியேற்ற பின்னர் இவர்களுக்கான கட்டண விகிதத்தினை உயர்த்துமாறு ஓர் பரிந்துரை குழுவை 2007ம் ஆண்டு நியமித்துள்ளார்.
அவர்களின் பரிந்துரைப்படி 2011ல் கட்டணமானது கணிசமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை எடுத்து நடத்தும் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது
அதற்கு பின்னர் கட்டண விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்று சமீபத்தில் அரசுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தற்போது உயர்நீதிமன்றத்தினை தவிர்த்து, சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை எடுத்து நடத்தும் வழக்கறிஞர்களுக்கு பயன்படும் வகையில் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
தொடர்ந்து, இதற்கான அரசாணையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை குற்றவியல் அரசு வழக்கறிஞர் தேவராஜன், ராமநாதபுரம் குற்றவியல் அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், விழுப்புரம் குற்றவியல் அரசு வழக்கறிஞர் டி.எஸ்.சுப்ரமணியம், சென்னை உரிமையியல் வழக்கறிஞர் ஷாஜகான் உள்ளிட்டோரிடம் வழங்கினார்.