தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதவி உயர்வு - விவரங்களை அனுப்புமாறு உத்தரவு
தமிழகத்தில் ரேஷன் ஊழியர்களுக்கு ஓர் முக்கியமான சந்தோஷமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கூட்டுறவுத்துறைகளில் நடத்தும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பதவிகளில் பணிபுரிந்து வரும் 25 ஆயிரம் பேர்களுக்கு பல வருடங்களாக பதவியுயர்வு வழங்கப்படவில்லை. இது குறித்து ஊழியர்களின் கோரிக்கையினை ஏற்ற கூட்டுறவு துறை சமீபத்தில் காலி பணியிடங்களுக்கு ஏற்ப சீனியாரிட்டி அடிப்படையில் விற்பனையாளருக்கு இளநிலை உதவியாளராகவும், உரம் விற்பனையாளராகவும், எடையாளருக்கு விற்பனையாளராகவும் பதவி உயர்வு வழங்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை பலவ சங்கங்கள் முறையாக பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.
பதவியுயர்வு வழங்கப்பட்ட விவரங்களை அனுப்பி வைக்க உத்தரவு
இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், மண்டல இணை பதிவாளர்களுக்கு ஓர் சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், நீதிமன்ற ஆணையில் தகுதியுள்ள விற்பனையாளர், எடையாளர்களுக்கு பதவி உயர்வினை வழங்கிவிட்டு, பின்னர் ஏற்படும் காலியிடங்களுக்கு ஏற்றார் போல் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் வாயிலாக ஆட்களை புதிதாக நியமித்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தங்கள் மண்டலத்தில் பணிபுரியும் தகுதியுள்ள விற்பனையாளர், எடையாளருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்ட விவரங்களை அனுப்பி வைக்குமாறும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.