கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு
கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, தவறாக வழிநடத்திய வழக்கில், நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம். கடந்த 2018ஆம் ஆண்டு, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, பாலியல் ரீதியாக மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக ஆடியோ ஒன்று வெளியானது. இந்த விவகாரத்தில் பல அரசு அதிகாரிகள் முதல் அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வரை தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சிபிசிஐடி விசாரணையின் அடிப்படையில், நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவர் மீது 4 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நிர்மலா தேவி தவிர மற்ற இருவர் விடுதலை
விசாரணையின் இறுதியில், நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டும்தான் குற்றவாளிகள் என உறுதியாக, மூவர் மீதும் சுமார் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்த்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் விசாரணையின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதன்படி, இன்று மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அதே நேரத்தில், 2ஆம் மற்றும் 3 ஆம் குற்றவாளிகளான முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.