26ம் தேதி முடிவடையும் 'ஜோடோ யாத்திரை' தொடர்ந்து பிரியங்கா மேற்கொள்ளவுள்ள 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தனது 'ஜோடோ யாத்திரை'யை துவக்கினார். இந்தியாவின் மிகமுக்கியமான அரசியல் பாதயாத்திரையாக கருதப்படும் இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களை கடந்து சென்று 3000 கிலோ மீட்டர் நிறைவு பெற்றுள்ளது. இடையில் 9 நாட்கள் இடைவெளி எடுத்துக்கொண்ட இந்த பாதயாத்திரை மீண்டும் இன்று உத்தரப்பிரதேசத்தில் துவங்கி 120 கி.மீ. தூரம் செல்லவுள்ளது. இதில் பிரியங்கா காந்தியும் கலந்துகொள்கிறார், உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் யாத்திரை முழுவதிலும் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி காஷ்மீர் ஸ்ரீ நகரில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ராகுல் காந்தி தனது யாத்திரையை முடிக்கிறார்.
பிரியங்கா காந்தி தலைமையில் 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை
இதனை தொடர்ந்து, பிரியங்கா காந்தி 2 மாத பாத்தியாத்திரை மேற்கொள்ளவுள்ளார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி, ராகுல் காந்தி யாத்திரையை முடித்தவுடன் ஆரம்பிக்கவுள்ள பிரியங்காவின் இந்த பாதயாத்திரை குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால் கூறுகையில், "ஜோடோ யாத்திரை முடிந்தவுடன் அதன் நோக்கம் குறித்து மக்களிடம் தெரிவிக்க 'ஹாத் சே ஹாத் ஜோடோ' என்னும் யாத்திரையை காங்கிரஸ் துவங்கவுள்ளது. இதற்கு பிரியங்கா காந்தி தலைமை தாங்குவார். ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரத்திலும் யாத்திரையை மேற்கொள்வார், இந்த யாத்திரிரையில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இதன் மூலம், பணவீக்கம் எந்த அளவிற்கு நடுத்தர மக்களை பாதிக்கிறது என்று பெண்கள் மத்தியில் பிரியங்கா காந்தி எடுத்துரைப்பார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.