தமிழகத்தில் விலைவாசி உயர்வினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த சிலநாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து தமிழகத்தினை ஆளும் திமுக கட்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து எதிர்கட்சியான அதிமுக சார்பில் இன்று(ஜூலை.,20)தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இது குறித்த அறிவிப்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.
இதற்கான அறிவிப்பினை முன்னதாக வெளியிட்ட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, "விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து 2 ஆண்டுகளாக தமிழக மக்கள் வாழ்வானது கேள்விக்குறியாகி உள்ளது. சமையலுக்கு அன்றாடம் தேவைப்படும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலையேற்றம் மக்களை கடுமையாக பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம்
விலை உயர்வினை கட்டுப்படுத்த கோரிக்கை
மேலும் அவர், குறைந்த விலையில் பொருட்களை நியாயவிலை கடைகளில் விற்பனை செய்வதாக மார்தட்டிக்கொள்ளும் ஆளுங்கட்சி அதனை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடும் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரமக்கள் தமிழகத்தில் வாழவே முடியாது என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, மக்கள் நலனை மட்டுமே முன்வைத்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடக்கவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன்படி தற்போது சென்னையில் ஜெயக்குமார், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது.
அதேபோல் மதுரையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழகத்தில் விலையுயர்வினை கட்டுப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி, அதிமுக இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்திவருகிறது குறிப்பிடத்தக்கது.