40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பாரம்பரியம்! பிரம்மாண்டமான சாரட் வண்டியில் வந்து கொடியேற்றிய குடியரசுத் தலைவர்!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி கர்தவ்யா பாதையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்ட வேளையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 105 மி.மீ லைட் ஃபீல்ட் துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்க தேசத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு விழாவில் ஒரு முக்கிய நிகழ்வாக, 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஒரு பாரம்பரியம் மீண்டும் உயிர் பெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் சிறப்பு விருந்தினர்களான ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஆகியோர், ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர்கள் புடைசூழ, அரச கம்பீரத்துடன் பாரம்பரிய சாரட் வண்டியில் அணிவகுப்பு நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தனர்.
ராணுவ பலம்
ராணுவ பலம் மற்றும் ஆபரேஷன் சிந்தூர்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் முதல் குடியரசு தின அணிவகுப்பு இதுவாகும். இதில் இந்தியாவின் நவீன ராணுவத் தளவாடங்களான பிரமோஸ் மற்றும் ஆகாஷ் ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டன. வான்வழியே 29 போர் விமானங்கள் பங்கேற்ற கண்கவர் ஃபிளைபாஸ்ட் நடைபெற்றது. இதில் ரஃபேல், சுகோய்-30, மிக்-29 மற்றும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வானில் பல்வேறு வடிவங்களில் பறந்து சாகசம் செய்தன.
வந்தே மாதரம்
வந்தே மாதரம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்
150 ஆண்டுகால வந்தே மாதரம்: இந்த ஆண்டு அணிவகுப்பின் மையக்கருத்தாக வந்தே மாதரம் பாடல் உருவான 150 வது ஆண்டு கொண்டாட்டம் அமைந்தது. சுமார் 2,500 கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினர்கள்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், கர்த்தவ்ய பவன் கட்டுமானத் தொழிலாளர்கள், லட்சாதிபதி திதி மற்றும் சுயஉதவிக் குழுவினர் என சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்கள் இந்த விழாவைக் காண அழைக்கப்பட்டிருந்தனர். மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் 30 அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன.