ராஷ்டிரிய விஞ்ஞான புரஸ்கார்: தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேராசியர்களுக்கு விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ராஷ்டிரிய விஞ்ஞான புரஸ்கார் விருதை வியாழன் (ஆகஸ்ட் 22) அன்று ராஷ்டிரபதி பவனில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். விக்யான் ரத்னா, விக்யான் ஸ்ரீ, விக்யான் யுவா மற்றும் விக்யான் டீம் என நான்கு பிரிவுகளில் சாதனை விஞ்ஞானிகளுக்கு 33 விருதுகள் வழங்கப்பட்டன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வாழ்நாள் முழுவதும் பங்களிப்பு செய்த விஞ்ஞானிகளுக்கு விக்யான் ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் முன்னோடியான பேராசிரியர் கோவிந்தராஜன் பத்மநாபன் இந்த ஆண்டு விக்யான் ரத்னா விருதைப் பெற்றுள்ளார். இந்த விருது முதல்முறையாக இந்த ஆண்டுதான் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஐடி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு விருது
இந்தியா முழுவதும் மொத்தம் 33 விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேராசியர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசியர் லக்ஷ்மணன் முத்துசாமிக்கு இயற்பியல் துறையில் சிறந்து விளங்கியதாக விக்யான் ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதேபோல் சென்னை ஐஐடியில் பேராசியராக உள்ள பிரபு ராஜகோபாலுக்கு தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையிலும், டாக்டர் ராதாகிருஷ்ண காந்திக்கு பொறியியல் அறிவியல் துறையிலும் விக்யான் யுவா விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் அறிவியல் திறமை மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் இந்திய விஞ்ஞானிகளின் அசாதாரண சாதனைகளை அங்கீகரிப்பதே இந்த விருதுகளின் நோக்கம் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார்.