மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டார் குடியரசு தலைவர் முர்மு
மணிப்பூர் விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கவலைகளை கேட்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புக்கொண்டார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை விடுத்ததை அடுத்து, நாளை காலை 11 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் வன்முறை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும், மணிப்பூர் நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மணிப்பூர் விஷயத்தில் குடியரசு தலைவரின் தலையீட்டை கோரிய எதிர்க்கட்சிகள்
மணிப்பூரில் நடந்த வன்முறைகளால் அந்த மாநிலம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்றும், அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இதனையடுத்து, இந்த விஷயத்தில் குடியரசு தலைவரின் தலையீட்டையும் அவர்கள் கோரினர். மேலும், 21 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொண்ட குழு ஒன்று கடந்த வார இறுதியில் மணிப்பூரின் நிலைமையை நேரில் சென்று பார்வையிட்டது. அப்போது, இரண்டு நாட்கள் பயணமாக மணிப்பூர் சென்றிருந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடினர். நாளை குடியரசு தலைவருடனான சந்திப்பின் போது, மணிப்பூரில் நடக்கும் வன்முறைகள், மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் போன்றவை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கவலை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.