'மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்': பிரசாந்த் கிஷோர்
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, "ஒதுங்கிக் கொள்ள வேண்டும்" என்றும், "ஓய்வு எடுக்க" வேண்டும் என்றும் கருத்துக்கணிப்பு வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். ராகுல் காந்தி கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸை "தோல்வியின்" வழியில் நடத்தி வருகிறார், ஆனால் அந்த கட்சியை அவர் வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளவும் மறுக்கிறார் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். "கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் எந்த வெற்றியும் இல்லாமல் ஒரே வேலையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனால், ஓய்வு எடுப்பதில் எந்தத் தீங்கும் இல்லை... ஐந்து ஆண்டுகளுக்கு வேறு ஒருவர் கையில் கட்சியை ஒப்படைக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்று கிஷோர் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் பாணி "ஜனநாயகத்துக்கு விரோதமானது"
காங்கிரஸ் கட்சியை மீட்டு தேர்தலில் வெற்றி பெற வைக்க நியமிக்கப்பட்டவர் பிரசாந்த் கிஷோர் ஆவார். ஆனால், அவருக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்யும் பணியில் இருந்து விலகிக் கொண்டார். இந்நிலையில், இன்று ராகுல் காந்தியை விமர்சித்த அவர், ராகுல் காந்தியின் பாணி "ஜனநாயகத்துக்கு விரோதமானது" என்றார். "தவறை ஒப்புக்கொண்டு அதை நிவர்த்தி செய்ய தீவிரமாக முயற்சிப்பதே ஒரு சிறந்த தலைவருக்கு அழகு. ஆனால், ராகுல் காந்திக்கு எல்லாம் தெரியும் என்று தெரிகிறது. உதவி தேவை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், யாரும் உங்களுக்கு உதவ முடியாது." என்று கிஷோர் கூறியுள்ளார்.