11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழக பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கனமழை காரணமாக பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால், அரையாண்டு தேர்வுகளை ஒத்திவைக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம்(டிசம்பர் 3) இரவு முதல் இன்று காலை வரை கனமழை பெய்தது.
4 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இதனையடுத்து, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், நேற்றும் இன்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. மேலும், வெள்ளம் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை(டிசம்பர் 6) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, சென்னை வெள்ளத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வரும் நிலையில் இந்த மாதம் தமிழகத்தில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.