தெலுங்கானா : முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கவிஞர் கதர் காலமானார்
செய்தி முன்னோட்டம்
பிரபல கவிஞரும், முன்னாள் மாவோயிஸ்ட் சித்தாந்தவாதியுமான கதர் என அழைக்கப்படும் கும்மாடி வித்தல் ராவ், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) பிற்பகல் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 77. அவருக்கு விமலா என்ற மனைவியும், சூர்யா, சந்திரா என்ற இரு மகன்களும், வெண்ணிலா என்ற மகளும் உள்ளனர்.
அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கதர் கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டு ஜூலை 20 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து அதிலிருந்து குணமடைந்தார். இருப்பினும், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவர் தனது இறுதி மூச்சை விட்டார்." என்று தெரிவித்துள்ளது.
gaddar background
கும்மாடி வித்தல் ராவ் எனும் கதரின் பின்னணி
1946 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் உள்ள காமரெட்டி மாவட்டத்தில் டூப்ரானில் பிறந்த கதர், நக்சலைட்டுகளின் மக்கள் போர்க் குழுவின் கலாச்சார அமைப்பான ஜன நாட்டிய மண்டலியின் நிறுவனராக இருந்தார்.
பின்னர் அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியாக (மாவோயிஸ்ட்) மாறியது. கவிஞரான அவர், புரட்சிகர பாடல்களை எழுதி, இசையமைத்து மேடைகளில் பாடினார்.
அவரது பாடல்கள் பல இளைஞர்களை மாவோயிசத்திற்கு அழைத்துச் செல்ல தூண்டியது. 2010ல் மாவோயிஸ்ட் கட்சியில் இருந்து விலகிய அவர், 2017ல் மாவோயிஸ்டுகளுடனான தனது உறவை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டதாக அறிவித்தார்.
தேர்தல் அரசியலுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வந்த கதர், 2018ல் தன்னை வாக்காளராகப் பதிவு செய்து, அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்தினார்.