
பொங்கல் கொண்டாட்டம் - 16,932 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கம்
செய்தி முன்னோட்டம்
வருகிற 15ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பண்டிகை கொண்டாட செல்ல முற்படுவார்கள்.
இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நேற்று (ஜனவரி 12ம் தேதி) முதல் 14ம் தேதி வரை சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அதே போல் 18, 19 தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 651 சிறப்பு பேருந்துகளும், மற்ற பகுதிகளில் இருந்து 1,508 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
ஆம்னி பேருந்துகள்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு - புகாரளிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு
இந்த சிறப்பு பேருந்துகளில் சென்னையில் இருந்து 14,500 பேரும், மற்ற பகுதிகளில் இருந்து 21,000 பேரும் பயணிக்க முன்பதிவு செய்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து, சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ், தாம்பர ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பைபாஸ் பேருந்து நிலையம, கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
பேருந்து இயக்கம் குறித்த விவரங்களுக்கு 9445014450, 9445014436 ஆகிய எண்களை உபயோகிக்கலாம்.
அதே போல், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800-425-6151, 044-24749002, 26280445, 26281611 ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.