
பெற்றோர்கள் கவனத்திற்கு! வரும் அக்டோபர் 12ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
செய்தி முன்னோட்டம்
வரும் அக்டோபர் 12, 2025 அன்று, தமிழ்நாட்டில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் மத்திய அரசின் சார்பில் 6 மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போலியோ இல்லாத சமுதாயத்தை தக்கவைத்து கொள்ளும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த முதல் கட்ட முகாம் பின்வரும் 6 மாவட்டங்களில் மட்டும் நடைபெறுகிறது: செங்கல்பட்டு மயிலாடுதுறை தஞ்சாவூர் திருநெல்வேலி சிவகங்கை விருதுநகர் சுகாதாரத்துறை அதிகாரிகள், மற்ற மாவட்டங்களில் அடுத்தக்கட்டமாக சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் பொதுவாக காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். தொலைதூர பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் (Mobile Teams) மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவரங்கள்
5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து
5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்குவது அவசியம். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். முகாம்களில் விடுபடும் குழந்தைகளை கண்டறிய, சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். அரசு நகர்ப்புற, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனை சாவடிகள் போன்ற இடங்களிலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.