சேவா தீர்த்: ஆளுநர் மாளிகையை தொடர்ந்து பெயர் மாற்றம் செய்யப்படுகிறது பிரதமர் அலுவலகம்
செய்தி முன்னோட்டம்
மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும், இந்திய பிரதமர் அலுவலகத்தின் (PMO) புதிய வளாகத்திற்கு 'சேவா தீர்த்த்' (Seva Teerth) என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. 'சேவா' என்றால் 'சேவை' என்றும், 'தீர்த்த்' என்றால் 'புனிதத் தலம்' அல்லது 'மையம்' என்றும் பொருள். இது, 'பொதுச் சேவைக்கான புனித மையம்' என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இந்த புதிய வளாகம், முன்பு 'எக்ஸிகியூட்டிவ் என்கிளேவ்' (Executive Enclave) என்று அறியப்பட்டது. இந்தப் புதிய பெயர், அரசாங்கத்தின் தத்துவம் 'அதிகாரத்திலிருந்து சேவைக்கு' மாறுவதை பிரதிபலிப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பணியிடம், சேவையின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இங்கு தேசிய முன்னுரிமைகள் தீர்மானிக்கப்படும் என்றும் கூறினர்.
விஸ்டா அலுவலகங்கள்
விஸ்டா வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகங்கள்
இறுதி கட்டத்தில் உள்ள இந்த வளாகத்தில், பிரதமர் அலுவலகம் (PMO) மட்டுமின்றி, அமைச்சரவைச் செயலகம், தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகம் மற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்களுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தும் இடமாகச் செயல்படும் இந்தியா ஹவுஸ் ஆகிய அலுவலகங்களும் இடம்பெறும். நாடு முழுவதிலும் உள்ள ஆளுநர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்களான 'ராஜ் பவன்' தற்போது 'லோக் பவன்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், 'சென்ட்ரல் செக்ரெட்டேரியட்' இனி 'கர்தவ்ய பவன்' என்று அழைக்கப்படும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.