பாமக தலைமை பதவி யாருக்கு? டெல்லி உயர் நீதிமன்றத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள வழக்கு!
செய்தி முன்னோட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை பதவி மற்றும் நிர்வாகக் குழு அங்கீகாரம் தொடர்பாக நிலவி வரும் சட்ட போராட்டங்கள் தற்போது இறுதி முடிவை எட்டியுள்ளன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் பதவிக்கால அங்கீகாரத்திற்கு எதிராக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரித்து இந்தியத் தேர்தல் ஆணையம் கடிதங்களை வெளியிட்டது. இம்முடிவு கட்சியின் விதிகளுக்கு முரணானது என்றும், போலி ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ராமதாஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அந்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தற்போதைய நிலை
தற்போதைய நிலை மற்றும் அரசியல் தாக்கம்
இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த விளக்கமான பதிலை டெல்லி உயர் நீதிமன்றம் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டது. தேர்தல் ஆணையத்தின் தரப்பு நியாயங்கள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடையும் நிலைக்கு வந்துள்ளன. நீதிமன்றம், விரைவில் இந்த விவகாரத்தில் தனது இறுதி தீர்ப்பை வழங்கவுள்ளதாக தெரிகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் அதிகாரப்பூர்வத் தலைமை மற்றும் சின்னம் தொடர்பான இந்த சட்டப் போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்திலும் சின்னம் தொடர்பான மற்றுமொரு வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கவுள்ள இந்த தீர்ப்பு பாமகவின் எதிர்கால செயல்பாடுகளில் மிக முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.