பிரதமர் மோடி தலைமையில் ஜூலை 3 -ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்; மந்திரி சபையில் மாற்றம் என தகவல்
பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்து வந்த கையோடு, சென்ற வாரம் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்தார். அதனை தொடர்ந்தே பொது சிவில் சட்டம் குறித்து மோடி உரையாற்றினார். இந்நிலையில் வரும் ஜூலை 3 -ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் கூடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான், சட்டிஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்தாண்டு தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கு ஆட்சியை பிடிப்பதற்காகவும், தற்போது நாட்டில் நிலவி வரும் குழப்பங்களுக்கு விடை காணவே இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறக்கூடும் என செய்திகள் கூறுகின்றன.
மந்திரி சபையில் மாற்றம்?
தற்போது நடைபெறவிருக்கும் மந்திரி சபை கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான, இதில் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மந்திரிகள் பங்கேற்கின்றனர். மேலும் இந்த கூட்டம் பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெறும் எனவும் கூறப்பட்டது. அதற்கு முன்னர் நடைபெற்ற கட்சி சார்ந்த இரண்டு பொதுக்கூட்டத்திலும், பாஜக கட்சியின் தலைவர் JP நட்டா கலந்து கொண்டார். அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவலை அடுத்துதான் தற்போது மந்திரி சபை கூடுகிறது. அதனால், மந்திரி சபையில் ஏதேனும் மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, வரவிருக்கும் தேர்தலை சந்திக்க, மாநில அளவில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்தும் பேசப்படும் எனவும் கூறப்படுகிறது.