
"தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் இருக்கிறார்கள்" என்று கூறிய காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி கண்டனம்
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் புதிய கருத்து குறித்து இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தோலின் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை நாடு பொறுத்துக்கொள்ளாது" என்று தெரிவித்ததோடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
கடந்த மாதம் அமெரிக்காவில் பரம்பரை வரி குறித்த பேசி சர்ச்சையை கிளப்பிய காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, சமீபத்தில் இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து பேசும்போது இந்திய மக்களின் நிறத்தை குறித்து பேசி இருக்கிறார். அது தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இந்தியா
சாம் பிட்ரோடாவின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை: காங்கிரஸ்
"இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு... கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள்" என்று காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா கூறி இருப்பது சர்ச்சையாகி உள்ளது.
சாம் பிட்ரோடாவின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறிய காங்கிரஸ் கட்சி, "இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக திரு. சாம் பிட்ரோடா ஒரு போட்காஸ்டில் கூறிய ஒப்புமைகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்த ஒப்புமைகளிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் முற்றிலும் விலகிக் கொள்கிறது." என்று கூறியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.