Page Loader
'தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை': கன்னியாகுமரி தியானத்திற்குப் பிறகு பிரதமர் மோடி உருக்கம்  

'தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை': கன்னியாகுமரி தியானத்திற்குப் பிறகு பிரதமர் மோடி உருக்கம்  

எழுதியவர் Sindhuja SM
Jun 01, 2024
08:36 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தனது 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்டு தமிழ் கவிஞர் திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த நினைவிடத்திற்குச் சென்ற ​​பிரதமர் மோடி, "தனது ஒவ்வொரு நிமிடமும் தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்படும்" என்று அங்கிருந்த வருகையாளர்கள் கையேட்டில் எழுதினார். "இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்திற்குச் சென்றதன் மூலம் நான் ஒரு தெய்வீக மற்றும் அசாதாரண ஆற்றலை உணர்கிறேன். இந்த நினைவிடத்தில், பார்வதி தேவியும் சுவாமி விவேகானந்தரும் தவம் செய்தனர். பின்னர், ஏக்நாத் ரானடே சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை நிலைநாட்டி உயிர்ப்பித்தார். இந்த இடம் ஒரு நினைவிடமாக உள்ளது" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தியா 

திருவள்ளுவர் சிலைக்கு சென்று மரியாதை செலுத்திய பிரதமர் மோடி 

"ஆன்மீக மறுமலர்ச்சியின் முன்னோடியான சுவாமி விவேகானந்தர், எனது உத்வேகமாகவும், எனது ஆற்றல் மூலமாகவும், எனது பயிற்சியின் அடித்தளமாகவும் இருந்தார். நாடு முழுவதும் பயணம் செய்த சுவாமி விவேகானந்தர், இந்த இடத்தில் தியானம் செய்தார். அங்கு அவருக்கு ஒரு புதிய வழி கிடைத்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, சுவாமி விவேகானந்தரின் இலட்சியங்கள் இந்தியாவை வடிவமைத்து வருவதால், இந்தப் புனிதமான இடத்தில் பயிற்சி செய்ய எனக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம்" என்று பிரதமர் மோடி அந்த கையேட்டில் எழுதியுள்ளார். தனது தியான அமர்வை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, வெள்ளை உடை அணிந்து, விவேகானந்தர் பாறைக்கு அருகில் அமைந்துள்ள 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு சென்று, அங்கு அவருக்கு பெரிய மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.