சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
நாளை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் என்று பிரதமர் அலுவலகம்(PMO) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கண்காட்சி நடத்தப்பட உள்ளது. "அருங்காட்சியகங்கள், நிலைத்தன்மை மற்றும் நல்வாழ்வு" என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருள் ஆகும். அருங்காட்சியகங்கள் இந்தியாவின் முக்கியமான கலாச்சார மையங்களாக உருவாகி வருவதால், அருங்காட்சியக நிபுணர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இது போன்ற அருங்காட்சியகக் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.
புதிய தேசிய அருங்காட்சியகங்களின் மெய்நிகர் மாதிரியை பிரதமர் மோடி திறந்து வைப்பார்
நிகழ்ச்சியின் போது, வடக்கு மற்றும் தெற்குத் தொகுதிகளில் கட்டப்பட இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தின் மெய்நிகர் மாதிரியை பிரதமர் மோடி திறந்து வைப்பார். இந்த அருங்காட்சிய கண்காட்சியில், இந்தியாவின் முக்கியமான வரலாற்று நிகழ்வுகள், ஆளுமைகள் மற்றும் சாதனைகளை முன்னிலைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்படும். உலகெங்கிலும் உள்ள கலாச்சார நிறுவனங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் சர்வதேச பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள். கலாச்சார பாரம்பரியத் துறையில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்க இந்த அருங்காட்சியக கண்காட்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.