சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
சிவமொக்கா விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப் 27) திறந்து வைத்தார். மேலும், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் கர்நாடகாவுக்கு பிரதமர் ஐந்தாவது முறையாக பயணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தை பிரதமர் மோடி நடைபயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். மேலும், சிவமொக்கா விமான நிலைய திறப்பு விழாவில் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். பிஎஸ் எடியூரப்பா இன்று தனது 80வது பிறந்தநாளையும் கொண்டாடுகிறார். சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, விமான நிலையம் பிரமாண்டமாகவும் அழகாகவும் இருக்கிறது என்று கூறினார்.
தாமரை வடிவில் ஒரு விமான நிலையம்
"சிவமொக்கா விமான நிலையம் பிரமாண்டமாகவும் அழகாகவும் இருக்கிறது. இந்த விமான நிலையத்தில், கர்நாடகாவின் பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையை ஒருவர் காணலாம். இது ஒரு விமான நிலையம் மட்டுமல்ல. இது இப்பகுதி இளைஞர்களின் கனவுகளின் புதிய பயணத்திற்கான உந்துதலாகும்." என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். சுமார் 450 கோடி ரூபாய் செலவில் இந்த புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. தாமரை வடிவில் இருக்கும் இதன் பேசெஞ்ஜர் டெர்மினல் கட்டிடத்தில் ஒரு மணி நேரத்திற்கு 300 பயணிகளைத் தங்க வைக்க முடியும். பிரதமர் மோடி இன்று தனது கர்நாடக பயணத்தின் போது ஷிகாரிபுரா-ராணேபென்னூர் புதிய ரயில் பாதை மற்றும் கோட்டகங்குரு ரயில் பெட்டி டிப்போ ஆகிய இரண்டு ரயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.