9வது பி20 உச்சி மாநாட்டினை துவக்கி வைத்த பிரதமர் மோடி உரை
இந்தியா நாட்டின் ஜி20 பிரெசிடென்சியின் பரந்த கட்டமைப்பின் கீழ் பாராளுமன்றத்தால் உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. அதன்படி நாட்டின் 9வது ஜி20 நாடாளுமன்ற உச்சி மாநாட்டினை(பி20) பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்.,13) டெல்லியில் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 'இது உலகின் நாடாளுமன்ற நடைமுறைகளின் 'மகாகும்பம்'. 140 கோடி இந்தியர்கள் சார்பாக இந்த மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்' என்று தனது உரையினை துவங்கினார். அதன் பின் அவர், 'இந்த ஜி20 மாநாடு நமது நாட்டு மக்களின் சக்தியினை கொண்டாடும் ஊடகமாக அமைந்துள்ளது' என்றும், 'ஜனநாயகத்தின் தாய் மற்றும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இந்த பி20 மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றும் பேசினார்.
'இது அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான நேரம்' - மோடி
தொடர்ந்து அவர் பேசுகையில்,'தற்போது உலகம் எதிர்கொண்டு வரும் மோதல்கள் யாருக்கும் பயனளிக்கப்போவதில்லை' என்று இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையே நடக்கும் போரினை குறிப்பிட்டு பேசியுள்ளார். தற்போதைய சூழலில் இந்த போரால் இரு நாடுகளிலும் 2,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடவேண்டியவை. மேலும் அவர், 'இந்த பிளவுபட்ட உலகம் நம் கண்முன் உள்ள சவால்களுக்கான தீர்வுகளை வழங்காது. இது அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான நேரம். அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டிய நேரம், ஒன்றாக முன்னேற வேண்டிய நேரம்' என்றும், 'இது அனைவரது வளர்ச்சி மற்றும் நலனுக்கான நேரம்' என்றும் கூறியுள்ளார். இதனிடையே இந்த உச்சி மாநாட்டில் ஜி20-உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டின் கருப்பொருள் என்னவென்றால்,'ஒரு பூமி, ஒரு குடும்பம், எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்'என்பவையாகும்.