தென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி
சந்திரயான்-3 இன்று நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆன்லைன் மூலம் பார்வையிட இருக்கிறார். 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் மூன்று நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். சந்திரயான் -3 இன் லேண்டர் மாட்யூல்(எல்எம்), அதாவது லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவை இன்று(ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கினால், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பிறகு சந்திர மேற்பரப்பில் தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா இருக்கும்.
சந்திரனில் தரையிறங்குவதற்கு இந்தியா இரண்டாவது முறையாக முயற்சிக்கிறது
சமீபத்தில், ரஷ்யா அனுப்பிய லூனா-3 என்னும் விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் மோதி தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியா அனுப்பி இருக்கும் சந்திராயன்-3 விண்கலத்தின் அனைத்து அமைப்புகளும் கச்சிதமாக செயல்படுகின்றன என்றும் எந்தவிதமான தவறும் நடக்காது என்றும் இஸ்ரோ கடந்த திங்கள்கிழமை தெரிவித்திருந்தது. சந்திரனில் தரையிறங்குவதற்கு இந்தியா இரண்டாவது முறையாக முயற்சிக்கிறது. இதற்கு முன்பு, சந்திரனில் தரையிறங்க முயற்சித்த இந்தியாவின் சந்திரயான்-2, செப்டம்பர் 7, 2019 அன்று நிலவின் மேற்பரப்பில் மோதி தோல்வியடைந்தது. இந்நிலையில், இந்தியாவின் இந்த இரண்டாவது முயற்சி கண்டிப்பாக வெற்றி பெரும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளும் கோடிக்கணக்கான இந்தியர்களும் எதிர்பார்க்கின்றனர்.