பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார்
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடுத்த மாதம் 8ம் தேதி தமிழகம் வருகிறார் என்று அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் அவர் 294 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அதுவும் குறிப்பாக சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையினை துவக்கி வைக்கவும், சென்னை தாம்பரம்-செங்கோட்டை இடையிலான ரயில் சேவையினை துவக்கி வைக்கவும் உள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. அதே போல் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ரயில் சேவையினையும் தொடங்கி வைக்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில்
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் தமிழகத்தில் ஏற்கனவே சென்னை சென்ட்ரல் முதல் மைசூரு வரை இயக்கப்படுகிறது. தற்போது இயக்கப்படவுள்ள சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் தமிழகத்தின் இரண்டாவது ரயில் ஆகும். மேலும் தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இதுவாகும். கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.