LOADING...
சமூக வலைதளங்களுக்கு இனி அரசின் அடையாள ஐடி கட்டாயம்? அயர்லாந்து அரசின் அதிரடித் திட்டம்
சமூக வலைதளங்களுக்கு அரசு ஐடியை கட்டாயமாக்க அயர்லாந்து திட்டம்

சமூக வலைதளங்களுக்கு இனி அரசின் அடையாள ஐடி கட்டாயம்? அயர்லாந்து அரசின் அதிரடித் திட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 29, 2025
04:13 pm

செய்தி முன்னோட்டம்

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் பயனாளர்களின் அடையாளச் சான்று மூலம் கணக்குகளைச் சரிபார்க்கும் புதிய சட்டத்தைக் கொண்டு வர அயர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அயர்லாந்து துணைப் பிரதமர் சைமன் ஹாரிஸ் அளித்துள்ள பேட்டியின்படி, சமூக வலைதளங்களில் தங்களின் அடையாளத்தை மறைத்துக்கொண்டு மற்றவர்களைத் தாக்கும் 'கீபோர்டு வாரியர்ஸ்' மற்றும் போலி போட்கள் ஆகியவற்றை ஒடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இனி சமூக வலைதளக் கணக்குகளைத் தொடங்க பயனாளர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ அடையாளச் சான்றைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த கடுமையான வயது சரிபார்ப்பு முறைகளும் கொண்டு வரப்படும்.

நிறுவனங்கள்

சிலிக்கான் வேலி நிறுவனங்களுடன் மோதல்

இந்தத் திட்டம் மெட்டா, கூகுள் மற்றும் எக்ஸ் போன்ற பெருநிறுவனங்களுடன் பெரிய மோதலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த நிறுவனங்களின் ஐரோப்பியத் தலைமையகங்கள் அயர்லாந்தின் டப்ளின் நகரில் அமைந்துள்ளன. அமெரிக்க நிறுவனங்கள் மீதான இத்தகைய கட்டுப்பாடுகளை தணிக்கை நடவடிக்கை என்று கூறி அமெரிக்கத் தரப்பில் ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சில முக்கியப் பிரதிநிதிகளுக்கு அமெரிக்கா விசா தடைகளையும் விதித்துள்ளது.

ஜனநாயகம்

ஜனநாயகத்தைப் பாதுகாத்தல்

சைமன் ஹாரிஸ் கூறுகையில், "நிஜ வாழ்க்கையில் எது சட்டவிரோதமானதோ, அது இணையதளத்திலும் சட்டவிரோதமானதாகவே கருதப்பட வேண்டும். இது தனிப்பட்ட நபர்களுக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கே விடப்படும் சவாலாகும்." என்று குறிப்பிட்டார். இந்தத் திட்டத்திற்குப் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், சமூக வலைதளங்களில் ஒருவரின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அவதூறு பரப்புவது என்பது இனி முடியாத காரியமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement