India AI Summit 2026: உலகத் தலைவர்கள் முன்னிலையில் இன்று பிரதமர் மோடி உரை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் ராஜதந்திர வலிமையை பறைசாற்றும் வகையில், புதுடெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் "இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026" (India AI Impact Summit 2026) மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார். "குளோபல் சவுத்" நாடுகளின் AI தலைநகராக இந்தியா உருவெடுத்துள்ளதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது. இன்று காலை 9:15 மணிக்கு மாநாட்டிற்கு வருகை தரவுள்ள 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களைப் பிரதமர் மோடி நேரில் வரவேற்பார். அதனைத் தொடர்ந்து, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்கள் தொடக்க விழாவில் உரையாற்ற உள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. காலை 10:25 மணியளவில் பிரதமர் மோடி உலக தலைவர்கள் முன்னிலையில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.
சர்வதேச அங்கீகாரம்
முன்னணி நிறுவனங்களின் CEO-க்கள் பங்கேற்கவுள்ளனர்
இந்த மாநாட்டில் 60 நாடுகளை சேர்ந்த 2.5 லட்சத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் மற்றும் மைக்ரோசாப்ட், ஓபன் ஏஐ போன்ற முன்னணி நிறுவனங்களின் CEOக்கள் பங்கேற்றுள்ளனர். இன்றைய நிகழ்வில், மாலை 5.30 மணி முதல் நடைபெறும் தலைமை நிர்வாக அதிகாரி வட்டமேசைக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பார். இதில் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் தொழில் நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் அரசுத் தலைமையுடன் இணைந்து முதலீடு, ஆராய்ச்சி ஒத்துழைப்பு, விநியோகச் சங்கிலிகள் மற்றும் AI அமைப்புகளைப் பயன்படுத்துவது குறித்து விவாதிப்பார்கள். முன்னதாக, பார்வையாளர்கள் மற்றும் கண்காட்சியாளர்களிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, மாநாடு பிப்ரவரி 21 வரை ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.