108வது இந்திய அறிவியல் மாநாடு: தெரிந்ததும் தெரியாததும்!
பிரதமர் நரேந்திர மோடி 108வது இந்திய அறிவியல் காங்கிரஸ்(ISC) மாநாட்டில் இன்று(ஜன:3) உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்கு முன்பு 2020ஆம் ஆண்டு பெங்களூரில் வைத்து இது நடத்தப்பட்டது. இந்த முறை 5 நாட்கள் நடக்கவிருக்கும் இந்த மாநாடு, ராஷ்டிரசந்த் துகாடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இந்த பல்கலைக்கழகம் தனது 100 ஆண்டு விழாவையும் இந்த வருடம் கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருட மாநாட்டின் சிறப்பம்சங்கள்:
"பெண்கள் முன்னேற்றத்துடன் நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" என்பதே இந்த வருட ISCயின் கருப்பொருளாகும். அரசாங்க வெளியீட்டின்படி, இந்த அமர்வு பெண்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்தும். நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், இலக்குகள் போன்றவற்றிலும் இது கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரை இல்லாத 'குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ்' என்ற ஒரு தனித்துவமான அம்சமும் இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குழந்தைகளின் அறிவியல் திறனை வெளிப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது. 'பழங்குடி அறிவியல் காங்கிரஸ்' என்பது பழங்குடியின நடைமுறைகளின் அறிவியலை காட்சிப்படுத்தும். 'விவசாயி அறிவியல் மாநாடு' என்ற அமர்வுகள் உயிரியல் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இளைஞர்கள் விவசாயத்திற்கு வருவதை ஆதரிக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.