'மனதின் குரல்' நிகழ்ச்சியில் சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி
இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமைகளில் நாட்டு மக்களிடையே அகில இந்திய வானொலியில் 'மனதின் குரல்' என்னும் நிகழ்ச்சியில் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இன்று(செப்.,24) 105வது அத்தியாயமானது ஒலிபரப்பட்டது. அதன்படி இதில் பேச துவங்கிய மோடி, "இந்தாண்டு 'சந்திராயன் 3' வெற்றியினை தொடர்ந்து இந்தியா தலைமையில் ஜி20 மாநாடு வெற்றிகரமாக அரங்கேறியது இந்தியர்களுக்கான இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். தொடர்ந்து அவர், "குறிப்பாக அனைத்து உலக தலைவர்களும் ராஜ்கோட்டில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தியது என்பது பெருமையின் உச்சக்கட்டம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 30ஆண்டு காலமாக 200க்கும்-மேற்பட்ட புறாக்களை வளர்த்து வரும் ஆட்டோ ட்ரைவர்
மேலும் அவர் இந்த நிகழ்ச்சியில், சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராஜேந்திர பிரசாத் என்பவரை மனதார பாராட்டி பேசினார். ஆட்டோ ஓட்டுநராகவுள்ள ராஜேந்திர பிரசாத் கடந்த 30ஆண்டு காலமாக 200க்கும்-மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார். அந்த புறாக்களுக்கு தேவையான தண்ணீர், உணவுகள் உள்ளிட்டவைகளை மிக சிறப்பான முறையில் அளித்து மிக அழகாக பராமரித்து வருகிறார் என்று மோடி குறிப்பிட்டுள்ளார். தனக்கு வரும் வருவாயில் ஓர் மிக பெரிய தொகையினை இந்த புறாக்களுக்கு அவர் பயன்படுத்தி வளர்த்து வருவதை அறிந்து தான் மிகவும் மகிழ்ச்சியுற்றதாகவும் கூறினார். அதனையடுத்து, பண்டிகை காலங்கள் துவங்கவுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த அவர், "வீட்டுக்கு புதுப்பொருட்கள் வாங்கும் பட்சத்தில் அது இந்திய தயாரிப்பாக இருக்கட்டும்"என்றும் வலியுறுத்தியுள்ளார்.