வளர்ந்த பாரதமே நமது லட்சியம்; பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இன்று (ஜனவரி 26) சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தில், இந்தத் தருணம் புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் ஊட்டட்டும்." என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், "இந்தியாவின் கௌரவம், பெருமை மற்றும் புகழின் அடையாளமான இந்தத் தேசியத் திருவிழா, உங்கள் வாழ்வில் புதிய உத்வேகத்தை அளிக்கட்டும். வளர்ந்த இந்தியாவிற்கான உறுதிப்பாடு இன்னும் வலுப்பெற வேண்டும் என்பதே எனது இதயப்பூர்வமான விருப்பம்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கருப்பொருள்
150 ஆண்டுகால வந்தே மாதரம் கருப்பொருள்
இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. பங்கிம் சந்திர சட்டோபாத்யாய எழுதிய நமது தேசியப் பாடலான வந்தே மாதரம் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக, இந்த ஆண்டு அணிவகுப்பிற்கு "150 ஆண்டுகால வந்தே மாதரம்" என்ற மையக்கருத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தத்துவம் அணிவகுப்பு, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் அலங்கார ஊர்திகள் என விழா முழுவதும் இழையோடுகிறது. இது இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், கலாச்சார அடையாளம் மற்றும் தற்போதைய தேசிய அபிலாஷைகளை ஒன்றிணைக்கும் விதமாக அமைந்துள்ளது.
சிறப்பு விருந்தினர்
சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சர்வதேச உறவு
டெல்லி கர்தவ்யா பாதையில் காலை 10:30 மணிக்குத் தொடங்கிய இந்த அணிவகுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர். ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோணியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கு வருகை தந்த இவர்களுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே பிராந்திய மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.