மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்
மக்களவையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்தார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கும் போது எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். "குடியரசு தலைவரின் உரை குறித்து பல எம்.பி.க்கள் நேற்றும், இன்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அவையின் அனைத்து விதிகளையும் பின்பற்றி குடியரசு தலைவர் உரை குறித்து கருத்து தெரிவித்த முதல்முறை எம்.பி.க்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். இதற்கிடையில், பிரதமர் மோடியின் உரையின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சபை உள்பகுதிக்குள் நுழையுமாறு கேட்டுக் கொண்டதற்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.
மக்களவையின் பேசினார் பிரதமர் மோடி
'நாடு தான் எங்களுக்கு முதலில் முக்கியம்': பிரதமர் மோடி
எதிர்க்கட்சித் தலைவர்களின் கூச்சலுக்கு மத்தியில், "நாங்கள் கொள்கை மற்றும் நிர்வாகத்தால் இந்தியாவை முதன்மையாக வைத்திருக்கிறோம்" என்று பிரதமர் மோடி கூறினார். "குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்க நான் இங்கு வந்துள்ளேன். நமது குடியரசுத் தலைவர் தனது உரையில் எங்களது விக்சித் பாரதத்தின் தீர்மானத்தை விவரித்தார். மாண்புமிகு குடியரசுத் தலைவர் முக்கியமான பிரச்சினைகளை எழுப்பி, நம்மையும் நாட்டையும் திறமையாக வழிநடத்தியுள்ளார்" என்று பிரதமர் தெரிவித்தார். "தேசத்தை முதலில் வைக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே நோக்கமாகும். எங்கள் பணிகள் மற்றும் கொள்கைகள் இந்த நோக்கத்தையும் இலக்கையும் நோக்கியே உள்ளன. நாட்டின் நலனுக்கு அவசியமான ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் நாங்கள் செய்துள்ளோம் என்பதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள்" என்று பிரதமர் மேலும் கூறினார்.
'பொய்களை பரப்பி படு பயங்கரமாக தோற்றவர்கள்": எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி
"கடந்த 10 ஆண்டுகளில், 'சப்கா சத் சப்கா விகாஸ்' என்ற நோக்கத்துடன் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நாடு நீண்ட காலமாக சமாதான அரசியலை மட்டுமே பார்த்து வந்தது. இந்நிலையில், சமாதான அரசியல் பேசாமல், சந்துஷ்டிகரன்(திருப்தி) என்ற கொள்கையுடன் நாம் இன்று முன்னேறி இருக்கிறோம்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து பொய்களை பரப்பி படு பயங்கரமாக தோற்றவர்களின் வலியை தன்னால் புரிந்து கொள்ள முடியும் என்று எதிர்க்கட்சிகளை விமர்சித்தும் இன்று பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமர் மோடி பேசும்போது, எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு முழக்கங்களை எழுப்பினர். அதனையடுத்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை கண்டித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசாங்கம் செய்த சாதனைகள் குறித்து பிரதமர் மோடி பேச்சு
2014 ஆம் ஆண்டு எனது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், நாடு ஊழலால் பாதிக்கப்பட்டிருந்தது என்று பிரதமர் கூறினார். "2014ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது ஊழலைப் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என்று கூறியிருந்தோம். ஊழல் நாட்டை கரையான்கள் போல நாசமாக்கியது. இருப்பினும், ஊழலைப் பொறுத்துக் கொள்ளாத எங்களின் அணுகுமுறைக்கு நாட்டு மக்கள் எங்களை ஆசிர்வதித்துள்ளனர்," என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசாங்கம் செய்த வெற்றிகள் மற்றும் சாதனைகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.