புட்டபர்த்தி சாய்பாபா நூற்றாண்டு விழா: சிறப்பு 100 ருபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்
செய்தி முன்னோட்டம்
புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100-வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் கோலாகலமாகத் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமின்றி, உலகின் 140 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்க புட்டபர்த்திக்கு வருகை தந்துள்ளனர். இந்த நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டப் பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தைக் கவுரவிக்கும் விதமாக, பிரதமர் மோடி அவர்கள் சிறப்பு நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார்.
கலை நிகழ்ச்சிகள்
கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன
விழாவில் நடந்த கலை நிகழ்ச்சியில், பிரபல இசை கலைஞர் டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது டிரம்ஸ் வாசிப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதை பிரதமர் மோடி கைதட்டி பாராட்டினார். பிரபல கர்நாடக பாடகி சுதா ரகுநாதன் குழுவினரின் இசை நிகழ்ச்சி மற்றும் நாட்டியக் கலைஞர்களின் கண்கவர் நடனங்கள் அரங்கேறின. இந்த கலை நிகழ்ச்சிகளைப் பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர். முன்னதாக காலை புட்டபர்த்தி வந்தடைந்த பிரதமர் மோடி, பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய்பாபா மகா சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் இயற்கை வேளாண் மாநாட்டிற்காக மதியம் கோவை செல்கிறார்.