உலகளாவிய நிச்சயமற்ற சூழலிலும் இந்தியா உறுதியாக உள்ளது: ராஜ்கோட்டில் பிரதமர் மோடி பேச்சு
செய்தி முன்னோட்டம்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற கச் மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியத்திற்கான துடிப்பான குஜராத் மண்டல மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் உரையாற்றிய அவர், உலகின் பல நாடுகள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நிச்சயமற்ற சூழலைச் சந்தித்து வரும் வேளையில், இந்தியா மட்டும் முன்னோடியில்லாத உறுதியுடனும், நம்பிக்கையுடனும் வளர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
உலக நாடுகள்
உலக நாடுகளின் சூழலும் இந்தியாவின் நிலையும்
சமீபகாலமாக பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்புகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இத்தகைய உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரம் சீராக முன்னேறி வருவதைக் குறிப்பிட்டார். இந்தியப் பொருளாதாரம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற வேகமாக முன்னேறி வருவதாகவும், நாட்டில் பணவீக்கம் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
வளர்ச்சி
இந்தியாவின் வளர்ச்சிச் சாதனைகள்
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி புதிய உச்சங்களைத் தொட்டுள்ளதாகப் பிரதமர் பட்டியலிட்டார்: வேளாண்மை: விவசாய உற்பத்தி புதிய சாதனைகளைப் படைத்து வருவதுடன், பால் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளது. தொழில்நுட்பம்: உலகிலேயே மொபைல் டேட்டா பயன்படுத்துவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மருத்துவம்: உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது. உள்கட்டமைப்பு: தொழில்முறைப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் வலுவான உள்கட்டமைப்பே இந்தியாவின் மிகப்பெரிய பலம்.
சீர்திருத்தம்
சீர்திருத்த மந்திரம்
'சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்' (Reform, Perform and Transform) என்ற மந்திரமே இந்தியாவின் வெற்றிக்குக் காரணம் என்று பிரதமர் விளக்கினார். துடிப்பான குஜராத் மாநாட்டை வெறும் நிகழ்வாக மட்டும் பார்க்காமல், 21 ஆம் நூற்றாண்டின் நவீன இந்தியாவின் கனவு நனவாகும் பயணமாகப் பார்ப்பதாக அவர் கூறினார். இந்த உறுதியான வளர்ச்சிப் பயணம் இந்தியாவை உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த நாடாக மாற்றும் என்றும் அவர் உறுதியளித்தார்.