
நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிறுவனருக்கு பிரதமர் மோடி அஞ்சலி; தீக்சபூமியில் அம்பேத்கருக்கும் அஞ்சலி செலுத்தினார்
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) அன்று நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்குச் சென்று, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் மற்றும் முன்னாள் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவரது வருகை, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரதிபதா நிகழ்ச்சியை மையமாக வைத்து அமைந்துள்ளது.
ரேஷிம்பாக்கில் உள்ள ஸ்ம்ருதி மந்திருக்கு வருகை தந்த மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், முன்னாள் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் உடனிருந்தனர்.
பிரதமர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடனும் உரையாடி, நினைவுச்சின்னத்தில் பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
அம்பேத்கர்
அம்பேத்கர் புத்தமதம் தழுவிய இடத்திற்கும் சென்ற பிரதமர்
ஸ்ம்ருதி மந்திருக்கு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, நரேந்திர மோடி வருவது இதுவே முதல்முறையாகும். கடைசியாக 2000 ஆம் ஆண்டில் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமாக இருக்கும்போது வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, டாக்டர் பிஆர் அம்பேத்கர் 1956இல் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதம் தழுவிய இடமான நாக்பூரின் தீக்சபூமிக்கும் பிரதமர் மோடி சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், நாக்பூரில் உள்ள மாதவ் நேத்ராலயா கண் நிறுவனத்தின் விரிவாக்கமான மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
பின்னர், நாக்பூரில் உள்ள சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட்டில் லாய்டரிங் வெடிமருந்து சோதனை ரேஞ்ச் மற்றும் யுஏவி ஓடுபாதை வசதியை அவர் திறந்து வைக்கிறார். பிரதமர் சத்தீஸ்கருக்கு செல்ல உள்ளார்.