மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, 2014இல் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற அதே நாளில், மே 28 அன்று, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. எனினும், வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ள மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறாது. 2023 ஆம் ஆண்டிற்கான ஜி20 தலைவர் பதவியை இந்தியா பெற்றிருப்பதை அடுத்து, ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் கூட்டம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ளது. அந்த கூட்டம் இந்த புதிய கட்டிடத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சங்கள்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானம் ஜனவரி 15, 2021 அன்று தொடங்கி, ஆகஸ்ட் 2022 வரை நடைபெறும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய நான்கு மாடி கட்டிடத்தில் 1,224 எம்.பி.க்கள் தங்கலாம். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மூன்று முக்கிய வாயில்கள் உள்ளன. அவைகளுக்கு கியான் துவார், சக்தி துவார் மற்றும் கர்மா துவார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் எம்.பி.க்கள், விஐபிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு தனித்தனி நுழைவு வாயில் இருக்கும். அரசியலமைப்பு மண்டபம், இந்த கட்டிடத்தின் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இது நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் அசல் பதிப்பு, அரசியலமைப்பு மண்டபத்தில் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.