பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
டெல்லியின் மிகப்பெரிய பழங்குடியின திருவிழாவான 'ஆதி மஹோத்சவத்தை' மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப் 16) தொடங்கி வைத்தார்.
மேலும், பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவுக்கு மலர் தூவி அவர் மரியாதையும் செலுத்தினார்.
பழங்குடி சமூகத்தின் நடைமுறைகள் மூலம் நிறைய கற்றுக்கொண்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "அவர்களின் தயாரிப்பு பொருட்கள் மூலம் பல்வேறு கலைகள், கலைப்பொருட்கள், இசை மற்றும் கலாச்சார காட்சிகளை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். இந்தியாவின் பன்முகத்தன்மையும் அதன் மகத்துவமும் ஒன்றிணைந்து அதன் பாரம்பரியத்தை தலைநிமிர்ந்து நிற்க செய்துள்ளது." என்று கூறினார்.
டெல்லி
விஸ்வகர்மா கௌசல் சம்மான் யோஜனா திட்டம்
பழங்குடியினரின் கலாச்சாரம், கைவினைப்பொருட்கள், உணவு வகைகள், வணிகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவற்றை கொண்டாடும் வகையில் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு லிமிடெட்(TRIFED) இந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துகிறது.
இந்த ஆண்டு, பிப்ரவரி 16 முதல் 27 வரை டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் 2023-24இல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி விஸ்வகர்மா கௌசல் சம்மான் யோஜனா திட்டம் குறித்தும் பிரதமர் பேசினார்.
பழங்குடியின மக்களுக்கு நிதி உதவி, திறன் பயிற்சி மற்றும் சந்தைப்படுத்தல் உதவியை இந்த விஸ்வகர்மா திட்டம் வழங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் பழங்குடியினரால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1000 பழங்குடி கைவினைஞர்கள் பங்கேற்கின்றனர்.