குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசு தலைவரான திரௌபதி முர்மு இன்று(ஜூன் 20) தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "ராஷ்டிரபதி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஞானம், கண்ணியம் மற்றும் நமது மக்களின் நலனுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக விளங்கும் அவர், தேசத்தின் முன்னேற்றத்திற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காகப் போற்றப்படுகிறார். அவரது அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு 2022இல் இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக பதவியேற்றார். இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசு தலைவரான திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசு தலைவர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். முன்னாள் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் ஆவார். ஜூன் 20, 1958 அன்று ஒடிசாவின் ராய்ராங்பூரின் பைடாபோசி பகுதியில் உள்ள உபர்பேடா கிராமத்தில் பிறந்த திரௌபதி முர்மு, 2015 முதல் 2021 வரை ஜார்கண்ட் ஆளுநராக பணியாற்றி இருக்கிறார். அதற்கு முன்பு, 2000 முதல் 2009 வரை ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகவும், 2000 முதல் 2004 வரை ஒடிசா அரசாங்கத்தில் மாநில அமைச்சராகவும்(சுயேச்சைப் பொறுப்பு) இவர் பணியாற்றியுள்ளார்.