LOADING...
பிரதமர் மோடியின் பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணம்: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
பிரதமர் மோடியின் பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணம்

பிரதமர் மோடியின் பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணம்: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 13, 2026
11:12 am

செய்தி முன்னோட்டம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு இராஜதந்திர, பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்குத் தனது அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணத்தைச் சனிக்கிழமை தொடங்கியுள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஆகியோரின் அதிகாரப்பூர்வ அழைப்பை ஏற்று இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் நீண்டகால உத்திசார் கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்தவும் இந்த உயர்மட்டப் பயணம் வழிவகுக்கும் என்று பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின் புறப்பாட்டு அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் பாரத் இன்னோவேட்ஸ் தொடக்கம்

பிரதமர் மோடி முதற்கட்டமாகப் பிரான்சின் நைஸ் நகருக்குச் சென்று, அங்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து இருதரப்பு உறவுகளின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தவுள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான கண்டுபிடிப்பு ஆண்டைக் கொண்டாடும் விதமாக, ஜூன் 14 ஆம் தேதி பாரத் இன்னோவேட்ஸ் (Bharat Innovates) என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை இருவரும் இணைந்து தொடங்கி வைக்கவுள்ளனர். இந்தத் தனித்துவமான தளம் இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை சர்வதேச முதலீட்டாளர்களுடன் நேரடியாக இணைப்பதுடன், நாட்டின் உயர்கல்வித் துறையில் இருந்து உருவாகும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உலகளாவிய சந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் ஒரு முக்கிய ஊக்கியாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்லோவாக்கியா

ஸ்லோவாக்கியா நாட்டின் பிராதிஸ்லாவா நகருக்கு வரலாற்றுப் பயணம்

பிரான்ஸ் நிகழ்வுகளைத் தொடர்ந்து, ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி ஸ்லோவாக்கியா குடியரசிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கடந்த 1993 ஆம் ஆண்டு ஸ்லோவாக்கியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டிற்கு செல்வது இதுவே முதல்முறையாகும். தலைநகர் பிராதிஸ்லாவாவில் ஸ்லோவாக்கிய அதிபர் பெல்லெக்ரினி மற்றும் பிரதமர் ஃபிகோ ஆகியோரைச் சந்தித்துப் பேசும் பிரதமர், அந்நாட்டின் முன்னணி வணிகத் தலைவர்களுடனும் கலந்துரையாடவுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினரான ஸ்லோவாக்கியாவுடனான இந்த வரலாற்றுப் பேச்சுவார்த்தை, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு (India-EU FTA) கூடுதல் பலம் சேர்க்கும் என நம்பப்படுகிறது.

Advertisement

ஜி7 உச்சி மாநாடு

பிரான்ஸின் எவியன் ஜி7 உச்சி மாநாடும் விவாடெக் 2026 பங்கேற்பும்

இதனைத் தொடர்ந்து, ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிரான்ஸின் எவியன் நகரில் நடைபெறும் 52வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இந்தியா தொடர்ந்து 8வது முறையாக இம்மாநாட்டிற்கு அழைக்கப்படுவது உலக அரங்கில் நாட்டின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் காட்டுகிறது. இம்மாநாட்டில் வளரும் நாடுகளின் (Global South) குரலாக இந்தியா ஒலிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பயணத்தின் இறுதிப் பகுதியாக ஜூன் 18 அன்று பாரிஸில் நடைபெறும் விவாடெக் 2026 (VivaTech) தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், அங்கு அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய இந்திய அரங்கைத் திறந்து வைத்து, பிரான்ஸில் வாழும் இந்திய வம்சாவளியினரையும் நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.

Advertisement