இமாச்சல் சென்று பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள லெப்சாவுக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும், பிரதமர் மோடி, சீருடை அணிந்த பாதுகாப்பு படையினருடன் தீபத் திருவிழாவைக் கொண்டாட இந்திய எல்லைகளுக்கு செல்வார். இந்நிலையில், இந்த தீபாவளிக்கும் இந்திய எல்லைக்கு சென்றிருந்த பிரதமர், தனது பயணத்தின் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில்(எக்ஸ் தளம்) பகிர்ந்து கொண்டார். ராணுவ உடை அணிந்து கொண்டு, பாதுகாப்பு படையினருடன் உரையாடுவது போன்ற புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் தீபாவளி வாழ்த்து
பிரதமர் மோடி, 2020 தீபாவளிக்காக ஜெய்சால்மரில் உள்ள லோங்கேவாலாவுக்கும், அதற்கு அடுத்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்ஷேராவுக்கும் சென்றார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாட கார்கில் சென்றிருந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வாழ்த்து தெரிவித்திருந்தார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், "அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த சிறப்புப் பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும்." என்று கூறி இருந்தார்.