உலக நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது: ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி
ஜி20 வெளியுறவுதுறை அமைச்சர்கள் கூட்டம் இன்று(பிப் 2) இந்தியாவின் தலைமையின் கீழ் புது டெல்லியில் நடைபெறுகிறது. இந்தியாவால் அழைக்கப்பட்ட ஜி20 அல்லாத உறுப்பினர்கள் உட்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர். ஜி20 சந்திப்பில் பிரதமர் பேசியதாவது: வளர்ச்சி, மேம்பாடு, பொருளாதார பின்னடைவு, பேரழிவை எதிர்க்கும் திறன், நிதி ஸ்திரத்தன்மை, ஊழல், பயங்கரவாதம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றின் சவால்களை எளிதாக்க உலகம் ஜி20 நாடுகளை எதிர் நோக்குகிறது. பல வருட முன்னேற்றத்திற்குப் பிறகு, இன்று நாம் நிலையான வளர்ச்சி இலக்குகளில் பின்நோக்கிச் செல்லும் அபாயத்தில் இருக்கிறோம். பல வளரும் நாடுகள் தங்கள் மக்களுக்கு உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதீத கடன் வாங்கி போராடி வருகின்றன.
பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம் பிரதமர் மோடி கூட்டத்தில் பேசியதாவது:
கடந்த சில ஆண்டுகளில், நிதி நெருக்கடிகள், பருவநிலை மாற்றம், தொற்றுநோய், பயங்கரவாதம் மற்றும் போர் ஆகியவையால் உலக நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது. இந்த தோல்வியின் மோசமான விளைவுகளை வளரும் நாடுகளே அதிகம் எதிர்கொண்டன. பணக்கார நாடுகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதல், வளரும் நாடுகளையும் அதிகம் பாதிக்கின்றது. இந்தியா தனது ஜி20 பிரசிடென்சியின் போது குளோபல் சவுத்துக்கு குரல் கொடுக்க முயன்றது. எந்தவொரு குழுவும் அதன் முடிவுகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்களைக் கேட்காமல் உலகளாவிய தலைமையை கோர முடியாது. காந்தி மற்றும் புத்தரின் தேசத்தில் நாம் சந்திக்கிறோம். இந்தியாவின் நாகரீகத்தின் நெறிமுறைகள் நம்மை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்துகின்றன, நம்மை பிரிக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. இதில் இருந்து நீங்கள் உத்வேகம் பெற நான் பிரார்த்திக்கிறேன்.