எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரை
எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக 2018 இல் முதல்முறையாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டார். மூன்று மாதங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் போன்ற சூழலைக் காணும் மணிப்பூர் குறித்த விவாதத்தை மத்திய அரசு தவிர்ப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என்பதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறின. பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அந்த மாநிலத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா பாதிக்கப்பட்டது: அமித் ஷா
முன்னதாக, புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 9), மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார். மேலும், வடகிழக்கு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் காங்கிரஸ் பல தசாப்தங்களாக தவறாக நிர்வாகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில், அமித் ஷாவுக்குப் பிறகு, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிப்படுத்தினார். இதற்கிடையே, 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 331 எம்பிக்கள் உள்ளனர். மேலும், பாஜக கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் மோடி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.