"கேள்விகள் கேளுங்கள்.. விடைகளைக் கண்டறியுங்கள்!" Gen Z மாணவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த உத்வேக உரை
செய்தி முன்னோட்டம்
டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) 57வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பட்டம் பெறும் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 587 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். "வாழ்க்கையில் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும், புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் உந்துதலையும் எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருங்கள்." என்று கூறி, மாணவர்கள் தங்களின் புதிய வாழ்க்கை அத்தியாயத்தை நம்பிக்கையுடன் தொடங்க ஊக்கமளித்தார்.
தயங்க வேண்டாம்
கேள்விகளைக் கேளுங்கள்; தீர்வுகளைக் கண்டறியத் தயங்காதீர்கள்
மாறிவரும் நவீன உலகில் தொழில்நுட்பம், தொழில்முறைகள் மற்றும் சர்வதேச சூழல்கள் மிக வேகமாக உருமாறி வருகின்றன என்று சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தொடர்ந்து கற்றுக் கொள்ளும் திறன் மட்டுமே ஒரு மனிதனை எப்போதும் வெற்றிகரமாக வைத்திருக்கும் என்றார்.
சமுதாயத்தில் எந்தவொரு விஷயத்தையும் சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வதைத் தவிர்த்து, தகுந்த கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும், அதற்குரிய சரியான தீர்வுகளைக் கண்டறியும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்தினார்.
பெரிய சவால்களை சிறிய பகுதிகளாகப் பிரித்து அணுகினால் எத்தகைய சிக்கலுக்கும் தீர்வு காணலாம் என்றார்.
வளர்ச்சி
செமிகண்டக்டர் முதல் ஸ்டார்ட்அப் வரை இந்தியாவின் வளர்ச்சி
இந்தியாவின் ஸ்டார்ட்அப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிப்பது இளைஞர்களே என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்திய நாட்டின் செமிகண்டக்டர் திட்டத்தைக் குறிப்பிட்ட அவர், சவாலான இலக்குகளைக் கையில் எடுக்கும் போது வெற்றி சாத்தியமாகும் என்றார்.
"சிப்கள் முதல் பிரம்மாண்டக் கப்பல்கள் வரை (Chips to Ships) அனைத்தும் இந்திய இளைஞர்களின் கரங்களால் இங்கு உருவாக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர், நாட்டின் வளர்ச்சிக்காக மாணவர்கள் பங்காற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சூப்பர் கம்ப்யூட்டர்
'பரம் பிரக்யா' சூப்பர் கம்ப்யூட்டர் வசதி தொடக்கம்
பட்டமளிப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஐஐடி டெல்லியின் சோனிபட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பரம் பிரக்யா என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சூப்பர் கம்ப்யூட்டர் வசதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த சாதனம் ஏஐ, தரவு அறிவியல் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சிப் பணிகளை வேகப்படுத்தப் பெரிதும் உதவும்.
மேலும், அடுத்த 30 முதல் 35 ஆண்டுகள் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை அடைவதில் மாணவர்களின் பங்களிப்பே முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.