கன்னியாகுமரியில் தியானம் செய்த பிறகு பிரதமர் மோடியின் புதிய தீர்மானம்
சமீபத்தில் கன்னியாகுமரியில் தனது 45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், "பாரதத்தின் வளர்ச்சிப் பாதை நம்மைப் பெருமையுடனும் புகழுடனும் வரவேற்கிறது" என்று கூறியுள்ளார். கன்னியாகுமரியில் மேற்கொண்ட ஆன்மீக பயணம் குறித்து பேசிய அவர், வெளி உலகத்திலிருந்து தன்னை தானே பிரித்துக்கொள்ள இந்த பயணம் உதவியது என்று கூறியுள்ளார். "ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான 2024 மக்களவைத் தேர்தல் நமது தேசத்தில் இன்று நிறைவடைகிறது. தற்போது என் மனம் பல அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது" என்று அவர் கூறியுள்ளார். "எனக்குள் எல்லையற்ற ஆற்றல் ஓட்டத்தை" உணர்கிறேன் என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடந்த தியானத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி
தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, கன்னியாகுமரியில் தியானம் செய்யத் தொடங்கியபோது, "அமைதியான அனுபவம்" கிடைத்தது என்று அவர் தெரிவித்துள்ளார். "சூடான அரசியல் விவாதங்கள், தாக்குதல்கள் மற்றும் எதிர்த்தாக்குதல்கள், தேர்தல்களின் போட்டிகள், குற்றச்சாட்டுகள்" அனைத்தும் மறைந்து தன் மனதில் அமைதி பரவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடந்த தியானத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, தனக்குள் ஒரு "பற்றற்ற உணர்வு" தோன்றியதாகவும், தனது மனம் வெளி உலகத்திலிருந்து முற்றிலும் விலகிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். "என்னுள் ஒரு பற்றின்மை வளர்ந்தது.. என் மனம் வெளி உலகத்திலிருந்து முற்றிலும் விலகியது. இவ்வளவு பெரிய பொறுப்புகளுக்கு மத்தியில் தியானம் செய்வது சவாலான விஷயமாகும். ஆனால் கன்னியாகுமரியும் சுவாமி விவேகானந்தரின் உத்வேகமும் அதை சிரமமின்றி எனக்கு கொடுத்தது" என்று அவர் தெரிவித்துள்ளார்.