தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் - 8.75 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான பொது தேர்வுகள் இம்மாதம் துவங்குகிறது. அதன்படி, இன்று(மார்ச்.,13) பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியுள்ளது. இந்த பொது தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேரடி பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனி தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேர் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கிறது. இதனையடுத்து 3 ஆயிரத்து 225 இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர், இருக்கை வசதி போன்றவைகளும் மாநில அரசால் செய்து தரப்பட்டுள்ளது.
முறைகேடுகளை தடுக்க பறக்கும் படைகள் நியமனம்
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த தேர்வினை கண்காணிக்க பொறுப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் தங்கள் பணிகளை சரிவர செய்து வருகிறார்கள். தேர்வின் பொழுது முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க 4,235 நிலையான குழுக்கள், பறக்கும் படைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், 281 வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க தேர்வு கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.