கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் இயக்கம் மொத்தமாக நிறுத்தப்பட்டு, தற்போது அனைத்து ஊர்களுக்குமான பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த மாத தொடக்கத்தில் அரசு பேருந்துகள் மட்டும் அங்கிருந்து இயக்கப்பட்டு வந்தது. பின்னர் பொங்கல் விடுமுறை முடிந்ததும், மற்ற நகரங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், கிளாம்பாக்கத்தில் இன்னும் சில வேலைகள் முடிக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் கூறினார். இந்த வேலைகள் அனைத்தும் வரும் நாட்களில் படிப்படியாக முடிக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு
இந்த நிலையில், பேருந்துகளுக்கான நடைமேடை எண்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, நடைமேடை 1 மற்றும் 2ல் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, குட்டம், குலசேகர பட்டினம், சிவகாசி, செங்கோட்டை, திசையன்விளை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படும். நடைமேடை 3ல் - காரைக்குடி, கீரமங்கலம், சாயல்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும், நடைமேடை 4 மற்றும் 5ல் - குமுளி, கும்பகோணம், தஞ்சை மற்றும் திண்டுக்கல்லுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். நடைமேடை 1 முதல் நடைமேடை 6 வரை, எஸ்.ஈ.டி.சி.பஸ்களுக்கும், நடைமேடை 7 முதல் முதல் 10 வரை டி.என்.எஸ்.டி.சி.பஸ்களுக்கும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது