கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18,000 நிதியுதவி! மொபைல் மூலமே PICME பதிவு செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் உள்ள ஏழை கர்ப்பிணி தாய்மார்களின் ஆரோக்கியத்தை பேணவும், பேறுகால நிதியுதவி வழங்கவும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள தாய்மார்களுக்கு ரூ.18,000 நிதியுதவியுடன், ரூ.4,000 மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகைகளைப் பெறவும், குழந்தையின் பிறப்புச் சான்றிதழைச் சுலபமாகப் பெறவும் 12 இலக்க பிக்மி (PICME) எண் அல்லது RCH ID என்பது மிக அவசியமான ஒன்றாகும்.
வரம்பு
நிதியுதவி மற்றும் தகுதி வரம்புகள்
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.18,000 நிதியுதவியானது ஐந்து தவணைகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. இதைப் பெற கர்ப்பிணித் தாய்மார்கள் சில அடிப்படைத் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்: விண்ணப்பிக்கும் தாய் கட்டாயம் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன், ஆரம்ப காலத்திலேயே பிக்மி இணையதளத்தில் பதிவு செய்திருப்பது அவசியம். அரசு மருத்துவமனைகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் இந்தச் சேவையைப் பெறலாம்.
பதிவு
ஆன்லைனில் சுயமாக பதிவு செய்யும் முறை
முன்பு கிராம சுகாதார செவிலியர்கள் (VHN) மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட இந்தப் பதிவு முறை, தற்போது இணையதளம் வாயிலாக எளிமையாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் மூலமே பின்வரும் படிகளைப் பின்பற்றிப் பதிவு செய்யலாம்: 1. முதலில் [https://picme.tn.gov.in/] என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். 2. அங்கு கேட்கப்படும் உங்களின் தனிப்பட்ட அடையாள அட்டை விவரங்களை உள்ளிட்டு 'Get Details' என்பதை அழுத்தவும். 3. உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை உள்ளிட்டு, பிறந்த தேதி மற்றும் இதர தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். 4. அனைத்து விவரங்களையும் சரிபார்த்து 'Submit' பொத்தானை அழுத்தினால் உங்களுக்கான தற்காலிகப் பதிவு எண் உருவாக்கப்படும்.
ஆவணங்கள்
தேவையான ஆவணங்கள் மற்றும் ஆஃப்லைன் பதிவு
இணைய வசதி இல்லாதவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி ஆஃப்லைன் முறையிலும் பதிவு செய்யலாம். இதற்குப் பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்: அதிகாரப்பூர்வ அடையாள அட்டை குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை. கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றிதழ். நிதியுதவி நேரடியாகச் சென்றடைய வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம். பதிவு செய்த பிறகு, உங்களின் 12 இலக்க PICME எண்ணைப் பயன்படுத்தி இணையதளத்திலேயே விண்ணப்பத்தின் நிலையை சரிபார்த்துக் கொள்ளலாம். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 11 லட்சம் தாய்மார்கள் இந்தப் போர்ட்டலில் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர்.