சென்னை மேயர் பிரியா வீட்டினை முற்றுகையிட்டு போராட்டம் செய்த பொதுமக்கள்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. இதற்கான மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினாலும், இன்னமும் பல இடங்களில் மின் இணைப்புகள் கொடுக்கப்படவில்லை, வெள்ளநீர் வடிந்த பாடில்லை. மக்கள் குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத காரணத்தினால் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளதால் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை, குடிநீர் தட்டுபாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள சென்னை மேயர் பிரியா வீட்டினை அப்பகுதி மக்கள் இன்று(டிச.,8)காலை முற்றுகையிட்டனர்.
'நாங்கள் யாரும் சாகல, பால் ஊத்துறதுக்கு' - ஆவேசமாக எழுந்த பெண்ணின் குரல்
அதன்படி, தங்களுக்கு உடனே தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வசதி செய்துத்தர வேண்டும். மின் இணைப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆத்திரத்தில் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அந்த கூட்டத்தை நோக்கி பேசிய மேயர் பிரியா அப்பகுதி மக்களுக்கு உடனே மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், குடிநீர், பால் உள்ளிட்டவைகள் கிடைக்க வழிவகை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு பெண்ணின் குரல், 'நாங்கள் யாரும் சாகல, பால் ஊத்துறதுக்கு' என்று ஆவேசமாக எழுந்தது. பின்னர் ஒருவழியாக மேயர் அளித்த உறுதியின் பேரில் அங்கு கூடிய மக்கள் களைந்து சென்றுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.