மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்தினால் 10 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் தெரியுமா?
நடப்பு கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தவர்கள் கல்லூரிகளிலிருந்து இடைநிற்கும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை விதிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில், அந்த இடங்கள் அனைத்தும் முழுமையாக நிரம்பிவிட்டன. இதனிடையே, கலந்தாய்வில் இடங்களைப் பெற்று கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள், படிப்பை பாதியில் விட்டு விலகுவதாக இருந்தால் அவர்கள் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாம் சுற்று கலந்தாய்வு
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. கல்லூரி தேர்விற்கான கடைசி நாளும் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இதன் தொடர்ச்சியாக நாளை செப்டம்பர் 19ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் அட்மிஷன் ஆணையை பெற்றுக்கொண்டு 26ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படும். அதன் பின்னர் மருத்துவ படிப்பை இடை நிறுத்துபவர்களுக்கு 10 லட்சம் வரை அபராதம், வைப்பு தொகை, கல்வி கட்டணம் செலுத்திய பின்னரே வெளியேற முடியும்.