ஆந்திர அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியை கோரினார் பவன் கல்யாண்
நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், ஆந்திர அமைச்சரவையில் தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு தேசம் கட்சியின்(டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு வரும் புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், பவன் கல்யாண் தனது கட்சியினருக்கு ஐந்து அமைச்சரவை பதவிகளையும் கோரியுள்ளார். ஜனசேனா கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக பவன் கல்யாண் இன்று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜேஎஸ்பி மூத்த தலைவர் நாதெண்டலா மனோகர் அவரது பெயரை முன்மொழிந்ததை அடுத்து அனைத்து கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவையும் இன்று அவர் பெற்றார்.
ஆந்திராவில் அபார வெற்றி பெற்ற என்டிஏ
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை அவையின் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜனசேனா தெனாலி சட்டமன்ற உறுப்பினர் என்.மனோகர், பவன் கல்யாணின் பெயரை சட்டமன்றத்தில் தள தலைவராக முன்மொழிந்தார். இதனையடுத்து, மற்ற உறுப்பினர்கள் அவரை ஒருமனதாக ஆதரித்தனர். இந்த மக்களவை தேர்தலில் பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் நின்ற பவன் கல்யாண் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் போட்டியாளரான வங்கா கீதாவை தோற்கடித்து வெற்றி பெற்றார். 175 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் ஜனசேனாவுக்கு 21 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆந்திராவில் இருக்கும் 164 சட்டமன்றத் தொகுதிகளில்(டிடிபி-135, ஜனசேனா-21 மற்றும் பாஜக-8) பெரும்பான்மையுடன் என்டிஏ அபார வெற்றி பெற்றது.