நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும் எனத் தகவல்
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் சிறப்பு கூட்டுக் கூட்டத்தொடர் நவம்பர் 26 ஆம் தேதி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிறப்பு அமர்வு, இந்திய நாடாளுமன்றத்தின் பழைய பார்லிமென்ட் மாளிகையின் மைய மண்டபத்தில் நடைபெறும்.
அரசியலமைப்பு நவம்பர் 26, 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
மேலும் இந்திய அரசியலமைப்பு ஜனவரி 26, 1950 முதல் முழுமையாக நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தொடர்
பரபரப்பான கூட்டத்தொடர்
குறிப்பிடத்தக்க வகையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மற்றும் வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2024 ஆகியவை பற்றி விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2024 குறித்து பேசுகையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட்டார்.
குர்கானில் உள்ள பாட்ஷாபூர் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் பேசிய ஷா, "வக்ஃப் போர்டு சட்டம்... அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதை சரிசெய்வோம்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டுக்கும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால், கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.