நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: நாட்டையே உலுக்கப்போகும் அறிவிப்புகள் நாளை வெளியாகுமா?
நாடாளுமன்றத்தின் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை(செப்டம்பர் 18) தொடங்க உள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு ஏதோவொரு முக்கியமான விஷயத்தை அறிவிக்க போகிறது என்று பேசப்படுகிறது. இதனால், நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக் கூட்டத் தொடரில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பது குறித்து பல யூகங்கள் எழுந்துள்ளன. இந்த குழப்பத்திற்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் எதுவும் பட்டியலிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். இந்நிலையில், 75 ஆண்டுகால நாடாளுமன்றத்தின் பயணம் குறித்த விவாதம் நாடளுமன்றத்தில் நடைபெறும் என்றும், நான்கு மசோதாக்கள் குறித்த விவாதங்களும் நடைபெறும் என்றும் அரசாங்கம் கடந்த புதன்கிழமை தெரிவித்தது.
கடந்த சிறப்பு கூத்தொடரின் போது GST அறிமுகப்படுத்தப்பட்டது
ஆனால், மத்திய அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பினால் எதிர்க்கட்சிகள் சமாதானம் அடையவில்லை. கடைசி நேரத்தில் ஏதோ ஒரு பெரிய குண்டை பாஜக போடப்போகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதற்கு முன்பு, கடைசியாக, 2017ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டதொடர் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தொடரில் தான் நாட்டையே திருப்பிப்போட்ட GST வரி அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் போது ஒரு மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது அதுவே முதல்முறையாகும். இந்நிலையில், தற்போது 4 மசோதாக்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக பாஜக அரசு தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டிற்கு முன்பு, 2015, 2008, 1997, 1992, 1991, 1977ஆகிய ஆண்டுகளில் மட்டுமே நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டதொடர் கூட்டப்பட்டிருக்கிறது.
இந்த காலவரிசையைப் பகிரவும்