தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
நாடாளுமன்ற மக்களவையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான வழிமுறையை உருவாக்குவதற்கான மசோதா, குறுகிய விவாதத்திற்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா, 2023, ஏற்கனவே மேலவையில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் மசோதாவை மேலவையில் தாக்கல் செய்த சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், தேர்தல் ஆணையர்கள் திடீரென நீக்கப்படுவதற்கும், வேறு சில பிரச்சனைகளை கலைவதற்கும் மசோதாவில் முக்கிய திருத்தங்கள் அவசியம் என தெரிவித்தார். இருப்பினும், இம்மசோதா அரசியலமைப்பு சாசன சட்டத்திற்கு எதிராக உள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
தேர்தல் ஆணையர் நியமனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் என்ன?
புதிய சட்ட திருத்தம் தேர்தல் ஆணையர் நியமனம், நீக்கம் மற்றும் அவர்களது ஊதியம் ஆகியவற்றை கவனிக்கிறது. பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அல்லது லோக்சபாவில் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார். இந்த குழு முழுமையாக இல்லாவிட்டாலும், குழுவின் பரிந்துரைகள் செல்லுபடி ஆகும். மத்திய சட்ட அமைச்சர் தலைமையில் உள்ள தேடுதல் குழு, பரிந்துரை குழுவிற்கு ஆட்களை பரிந்துரைப்பர். தலைமை தேர்தல ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களாக பரிந்துரைக்கப்பட்ட, அவர்கள் குறைந்தது மத்திய அரசு செயலாளர்களாக பணியாற்றி இருக்க வேண்டும்.
பரிந்துரை குழுவில் இருந்து நீக்கப்பட்ட தலைமை நீதிபதி
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, தலைமை தேர்தல் ஆணையர்கள் மற்றும் தேர்தல் ஆணையர்கள் பரிந்துரை குழுவில் இருந்து, இந்தியாவின் தலைமை நீதிபதி நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை வகுக்கும் வரையில், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி பரிந்துரை குழுவில் இடம் பெறுவார்கள் என தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சட்ட திருத்தம், தேர்தல் ஆணையர்களை அவர்கள் பதவிக்காலத்தில் கடமைகளை நிறைவேற்றியதற்காக, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது.